நெரிஞ்சிப்பேட்டையில் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

பவானி, டிச. 5:  அம்மாபேட்டை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் பெருக்கெடுத்த மழைநீர், வடிகால் இல்லாததால் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாகக் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதியை நோக்கி மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகேயுள்ள மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கியுள்ளது.

இதனால், மெயின் ரோட்டில் உள்ள 10 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், ஏமாற்றமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த அம்மாபேட்டை போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

நெரிஞ்சிப்பேட்டை பேரூர் திமுக செயலாளர் என்.பி.கண்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலா உள்ளிட்டோர் பேச்சு நடத்தியதோடு, வீடுகளுக்குள் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். பேரூராட்சி ஊழியர்களைக் கொண்டு நீர்வழி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள், அடைப்புகள் அகற்றப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும், ஜெசிபி வாகனம் மூலம் தோண்டி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால், மழைநீர் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியது. கனமழையால் சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து தேங்கியுள்ளது. இதனை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories: