மாவட்டத்தில் வசிக்கும் விளிம்பு நிலை மக்கள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

ஈரோடு, டிச. 5: தமிழகத்தில்  வசிக்கும் பழங்குடியினர், நரிக்குறவர் உள்ளிட்ட விளிம்பு நிலையில்  வசிக்கும் மக்கள் பொருளாதார ரீதியாகவும், கல்வி, வேலை வாய்ப்புகளிலும் பின்  தங்கி உள்ளனர். மேலும் குடியிருப்புகள் கூட இல்லாமல் உள்ளனர். இந்நிலையில்,  இவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு திட்டங்கள்  செயல்படுத்தவும், குடியிருப்புகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த  அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் பழங்குடியினர் மற்றும்  விளிம்பு நிலை மக்கள் குறித்த கணக்கெடுப்பு பணி தொடங்கி நடைபெற்று  வருகின்றது.

ஈரோடு மாவட்டத்தில் இப்பணியானது பர்கூர், தாளவாடி, கடம்பூர்  உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நடைபெற்று வருகின்றது. மலைப்பகுதிகளில்  பணியாற்றும் ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.  கணக்கெடுப்பில் குடும்ப உறுப்பினர்கள், கல்வி நிலை, குடியிருப்பு  பகுதிக்கும், பள்ளிக்கும் உள்ள தொலைவு, ஆரம்ப சுகாதார நிலையம், சொந்த வீடு,  இலவச வீட்டுமனை பட்டா, கழிப்பறை, சொந்த நிலம், ஆதார் எண், வாக்காளர் அட்டை  எண், பள்ளி இடைநின்றல், ஆண்டு வருமானம், சாதி சான்று உள்ளிட்ட ஆவணங்கள்  உள்ளதா, பள்ளி இடைநின்றல் உள்ளிட்ட 27 வகையான கேள்விகள் கேட்கப்பட்டு  படிவங்களில் நிரப்பபடுகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அனைத்தும்  மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு  அரசுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், ஈரோடு மாவட்டத்தில் 75 சதவீதம்  கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: