ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு மேம்பாலத்தில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் சிகிச்சை

சென்னை, டிச.4: வேகமாக மொபட்டில் வந்த முதியவர் ஒருவர், ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. படுகாயமடைந்த அவருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்து நேற்று மதியம் மொபட்டில் வேகமாக வந்த முதியவர் ஒருவர், ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் மொபட்டை நிறுத்தினார். பின்னர், யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென அவர் மேம்பாலத்தின் தடுப்புச் சுவர் மீது ஏறி, அங்கிருந்து கீழே குதித்தார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். கீழே குதித்த நபருக்கு 2 கால்கள் மற்றும் முதுகு தண்டுவட எலும்பு முறிவு ஏற்பட்டதால், உயிருக்கு போராடினார்.

மேம்பாலத்தின் கீழ், பணியில் இருந்த தேனாம்பேட்டை போக்குவரத்து காவலர் மணிகண்டன்,, அந்த முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதித்தார். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்றவர் ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த விஜய்கிருஷ்ணன் (57) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், பாதியில் சிகிச்சையை நிறுத்தியதும் தெரியவந்தது. மேலும், நேற்று மதியம் தனது மனைவிடம் பேசிவிட்டு வேகமாக மொபட்டில் வந்த அவர், மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

More