வீட்டுக்குள் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் கரைபுரண்டு ஓடிய மழைநீரால் மண் அரிப்பு: கலெக்டர் தகவல்

கூடுவாஞ்சேரி, டிச.4:செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் கடந்த வாரம் பெய்த கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, ஜெகதீஷ் நகரில் வசிக்கும் குணசேகரன் என்பவரது 4 அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று முன்தினம் திடீரென 10 அடி பள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்கு வசித்த 7 குடும்பத்தினர், அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். இதையறிந்ததும், தாம்பரம் ஆர்டிஓ அறிவுடைநம்பி, வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து கலெக்டர் ராகுல்நாத், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன் ஆகியோர் நேற்று அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், அப்பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் கலெக்டர் ராகுல்நாத், செய்தியாளர்களிடம் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்புக்கும், அதனை ஒட்டியுள்ள மற்றொரு வீட்டுக்கும் இடையே நீர்வரத்து கால்வாய் உள்ளது. தற்போது மழை வெள்ளம் அதிவேகமாக கரைபுரண்டு ஓடியதால், மணல் அரிப்பு ஏற்பட்டு ஜெகதீஷ் நகரில் உள்ள வீட்டில் பள்ளம் ஏற்பட்டது. இரு தரப்பினரிடமும் கால்வாய் அகலப்படுத்த வழி விடும்படி  பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இப்பகுதியில் தண்ணீர் வற்றியவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முன்னதாக நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி மகாலட்சுமி நகர், அமுதம் காலனி, உதயசூரியன் நகரில் கலெக்டர், எம்எல்ஏ, ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, தாம்பரம் ஆர்டிஓ அறிவுடைநம்பி, வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம், பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் குணசேகரன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்திக் உட்பட பலர் இருந்தனர்.

Related Stories:

More