நுழைவு வாயில் கண்ணாடி உடைந்தது அமுதசுரபியை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்

புதுச்சேரி,  டிச. 4:  புதுச்சேரி காந்தி வீதி அமுதசுரபி அங்காடியில் போதிய அத்தியாவசிய  பொருட்கள் கிடைக்காமல், தீபாவளி கூப்பனுக்கு பொருட்கள் வாங்க சென்ற  கட்டுமான தொழிலாளர்கள் ஏமாற்றமடைந்து வருவதாக கூறி சிஐடியு தொழிலாளர்கள்  முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் தீபாவளி  பண்டிகையையொட்டி கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கூப்பனும், அமைப்பு  சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,000 கூப்பனும் வழங்கப்பட்டது. மொத்தம் 50  ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தீபாவளி பரிசு கூப்பன் இதுவரை  விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனை பெற்றுக் கொண்ட தொழிலாளர்கள் தங்களது  வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்காக அமுதசுரபி கடைகளில்  குவிந்து வருகின்றனர்.

காந்தி வீதி அமுதசுரபி  மட்டுமின்றி ஜிப்மர், தட்டாஞ்சாவடி, முருங்கப்பாக்கம் அமுதசுரபி கடைகள்  இயங்கினாலும் அங்கு போதிய அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில்லை எனக்கருதி  தினமும் பாகூர், கரிக்கலாம்பாக்கம், வில்லியனூர், திருபுவனை, மதகடிப்பட்டு,  கிருமாம்பாக்கம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் இருந்து கட்டுமான  தொழிலாளர்கள் காந்திவீதி அமுதசுரபிக்கு வருகின்றனர். அங்கும் சில  நாட்களாக பருப்பு, எண்ணெய், புளி, வத்தல் உள்ளிட்ட சமையலுக்கு தேவையான  அத்தியாவசிய பொருட்கள் குறைபாடு ஏற்படுவதால் அங்கு வரும் தொழிலாளர்கள்  ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சூழல் நிலவுகிறது. இதனால் காலை 7  மணிக்கெல்லாம் தொழிலாளர்கள் காந்தி வீதி அமுதசுரபி கடை முன் வந்து வரிசை  கட்டி நிற்க வேண்டிய அவலம் ஏற்பட்டது.

ேநற்று காலை இந்த கடையை ஊழியர்கள்  திறந்ததும் ஒரேநேரத்தில் கும்பலாக முண்டியடித்து ஆண்களும், பெண்களும் உள்ளே  நுழைய முயன்றனர். நுழைவாயிலில் இருந்த கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கி  விழுந்தது. இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுபற்றிய  தகவல் கிடைத்ததும் சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் தலைவர் கலியன்,  நிர்வாகிகள் பழனி, சிற்றரசு உள்பட கட்டுமான தொழிலாளர்கள் அமுதசுரபியை  முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

அப்போது கட்டுமான தொழிலாளர்களுக்கு  தீபாவளி டோக்கன் வழங்க 8 மையங்களை அமைத்த அரசு, தங்களுக்கான பொருட்களை  விநியோகிக்க அந்தந்த மையங்களிலேயே அமுதசுரபி அங்காடிகளை திறக்க வேண்டுமென  வலியுறுத்தினர்.  இங்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால்  நோய் தொற்று பரவும் சூழல் இருப்பதாக வேதனை தெரிவித்த அவர்கள், போதிய  அத்தியாவசிய பொருட்கள் பெரிய அமுதசுரபியிலேயே கிடைப்பதில்லை, அப்படியே  கிடைத்தாலும் வெளி  மார்க்கெட்டை விட கூடுதல் விலைக்கு விற்பனை  செய்யப்படுவதாக குற்றம் சாட்டினர். பின்னர் சிஐடியு கட்டுமான தொழிலாளர்  சங்க நிர்வாகிகளை அமுதசுரபி அதிகாரிகள் அழைத்து பேசினர். இதுதொடர்பாக  தலைமை செயலரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து  முற்றுகையை கைவிட்ட அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: