கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருப்பூர், டிச.4:  திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வரதன் (35). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரதனின் உறவினர் ஒருவர் தொழில் தொடங்குவதற்காக வரதனிடம் ரூ.1 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து தனது குழந்தைகளின் நகையை வங்கியில் அடமானம் வைத்து வரதன் ஒரு லட்சம் ரூபாயை அந்த நபருக்கு கொடுத்துள்ளார்.

பணத்தை வாங்கி கொண்ட அந்த நபர் அதன் பிறகு வங்கியில் ஒரு மாதம் கூட தவணை தொகையை கட்டவில்லை. இது குறித்து வரதன் அந்த நபரிடம் கேட்டபோது, நான் பணமே வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் கொடு, என்னை எதுவும் செய்யமுடியாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்  வேதனை அடைந்த வரதன் தனது மனைவி சத்யாவுடன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தார்.

அப்போது தான் மறைத்து வைத்திருந்த டீசல் கேனை எடுத்து மேலே ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்த டீசல் கேனை பிடுங்கி தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போது நடந்த விவரத்தை கூறினார். பின்னர் இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: