மறியல் செய்த 60 பேர் கைது

கோவை, டிச.4: கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள முத்தண்ணன் குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்து ஏராளமான வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. வீடுகளுடன் சேர்த்து அங்கிருந்த அங்காளம்மன் கோவில் உள்பட சில கோவில்களும் இடிக்கப்பட்டன.  இதில் அங்காளம்மன் கோவிலை மீண்டும் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவில் கட்டுவதற்கு மாற்றிடம் தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்காளம்மன் கோவிலை இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் கட்டிடம் கட்டி தரக்கோரி தமிழக சேனா சார்பில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. நேற்று மாலை தமிழக சேனா அமைப்பினர் முத்தண்ணன் குளம் அருகே உள்ள பூசாரிபாளையம் பகுதியில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பூசாரிபாளையத்தில் இருந்து வீரகேரளம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மறியலால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட தமிழக சேனா நிறுவன தலைவர் குணா, நிர்வாகிகள் சதீஷ், பாண்டியன் உள்பட 60 பேரை ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: