விவசாயியை தாக்கிய 2 பேருக்கு சிறை தண்டனை

கோவை, டிச.4: கோவை  சிறுமுகையை சேர்ந்தவர் ரவீந்திரநாத். விவசாயி. இவர் கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி தனது காரில் தோட்டத்திற்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது அவருடைய காரின் முன் பைக்கில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்களான ரங்கநாதன் (29), சுப்ரமணியன்(30) ஆகியோர் சென்றுகொண்டு இருந்தனர். அப்போது குறுகிய சாலையில் கார் செல்ல  வழி கேட்டு  ரவீந்திரநாத் ஹாரன் அடித்தார்.

ஆனால் அவர்கள் வழி விடவில்லை. இதனால் ரவீந்திரநாத் தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரங்கநாதன், சுப்ரமணியன் ஆகியோர் வழிவிட்டனர். பின்னர் அவர்கள் ரவீந்திரநாத்தின் காரை பின்தொடர்ந்து சென்றனர். அவர் காரை நிறுத்திவிட்டு தனது விவசாய நிலத்திற்கு சென்றபோது அங்கே சென்ற 2 பேரும் அவரிடம் தகராறு செய்தனர்.

அப்போது அவர்கள் ரவீந்திரநாத்தை தாக்கியதுடன், கார் கண்ணாடியை உடைத்தனர்.  சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கநாதன், சுப்ரமணியன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு வழக்கிற்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் ரங்கநாதனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாயும் அபராதமும், சுப்ரமணியனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பாலு நேற்று தீர்ப்பளித்தார்.

Related Stories: