வேலூர் அடுத்த பென்னாத்தூரில் சோகம் வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு சிறுவன் உட்பட 2 பேர் பலி: 3 பேருக்கு தீவிர சிகிச்சை; சுகாதாரத்துறையினர் முகாம்

வேலூர், டிச.4: வேலூர் அடுத்த பென்னாத்தூரில் வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு 4 வயது சிறுவன் உட்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வேலூர் மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்குடன், 90 சதவீத ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. ஏரிகளில் இருந்து வழியும் தண்ணீர், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் டெங்கு அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வேலூர் அடுத்த பென்னாத்தூர் பேரூராட்சி அல்லிவரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 20க்கும் மேற்பட்டவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மார்க்கபந்து என்பவரின் மகன் கலித்ராஜா(4) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். முன்னதாக கடந்த 1ம் தேதி இதே பிரச்னைக்காக அப்பாசாமி(62) என்ற முதியவர் இறந்தார்.

இதுபற்றி அறிந்தவுடன் நள்ளிரவே கணியம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் துரை, பேரூராட்சி செயல் அலுவலர் அர்ச்சுனன் ஆகியோர் தலைமையில் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் அங்கு முகாமிட்டு நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதிக்கு சப்ளை செய்யப்பட்ட குடிநீரின் மாதிரி, வீடு, வீடாக சென்று உணவு, தண்ணீர் மாதிரிகளையும் சோதனைக்காக சேகரித்து வாலாஜா அரசு மருத்துவமனை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று காலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார், ஆர்டிஓ விஷ்ணுபிரியா, தாசில்தார் செந்தில், ஒன்றிய கவுன்சிலர் கஜேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் அருள்நாதன் மற்றும் அதிகாரிகள் அல்லிவரத்தில் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பலரும் வீடு திரும்பிய நிலையில் 3 பேருக்கு மட்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயிற்றுப்போக்கு பாதிப்பால் சிறுவன் உள்பட 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஏரி மீன் உணவு காரணமா?

மழையால் நிரம்பியுள்ள பென்னாத்தூர், அல்லிவரத்தை ஒட்டியுள்ள ஏரி, குட்டைகளில் அங்குள்ள மக்கள் நேற்று முன்தினம் இரவு மீன்களை பிடித்து சமைத்து உண்டதாக கூறப்படுகிறது. இதுவே அல்லிவரம் வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இங்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதற்கு மீன் உணவு காரணமாக இருக்கலாம். அதனால் ஒவ்வொரு வீட்டிலும் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தண்ணீர் மற்றும் உணவின் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர்தான் வயிற்றுப்போக்குக்கான முழு காரணம் தெரியவரும்’ என்றனர்.

இதுதொடர்பாக எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் கூறுகையில், ‘பென்னாத்தூரில் வயிற்றுப்போக்கு பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர டாக்டர்கள் குழு அங்கு முகாமிட்டுள்ளது. இப்பிரச்னைக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவுநீர் இங்குள்ள ஏரிகளில் கலப்பதுதான் காரணம். இதில் பிடிக்கப்பட்ட மீனை சமைத்து உண்டதால்தான் வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றி பள்ளங்களை மூடவும் உத்தரவிட்டுள்ளேன். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றும் பிளான்ட் அமைப்பதற்காக ஏற்கனவே சட்டமன்றத்தில் பேசியுள்ளேன். தற்போது கலெக்டரிடமும் பேசி, முதல்வரிடம் கோரிக்கையை கொண்டு சென்று கழிவுநீர் சுத்திகரிப்பு பிளான்ட் அமைக்கப்படும்’ என்றார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், ‘பென்னாத்தூரில் வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு சிறுவன் மட்டும் இறந்துள்ளான். அப்பாசாமி என்ற முதியவர் கடந்த 1ம் தேதியே இறந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேரை தவிர மற்றவர்கள் வீடு திரும்பி விட்டனர். 3 பேரை என்னை கேட்காமல் டிஸ்சார்ஜ் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளேன்’ என்றார்.

மீன் பிடிக்க கலெக்டர் தடை

பென்னாத்தூர் பேரூராட்சி அல்லிவரம் மட்டுமின்றி அப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் யாரும் மீன் பிடிக்கக் கூடாது. தண்டோரா மூலமும் இதுபற்றி மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவுநீர் கலப்பு பென்னாத்தூர் அல்லிவரம் ஏரியில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவுநீர் கலப்பதாக ஏற்கனவே புகார் எழுந்தது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் பல தடவை ஆர்ப்பாட்டங்களும் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கழிவுநீர் ஏரியில் கலக்கிறது. பலமுறை நாங்கள் இதுபற்றி புகார் தெரிவித்துவிட்டோம். போராட்டங்களையும் நடத்தி விட்டோம். இப்போதைய பிரச்னைக்கு அதுதான் காரணம். எனவே, மருத்துவமனை கழிவுநீர் எங்கள் பகுதியில் கலப்பதற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.

Related Stories: