திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனையில் முதுகு தண்டுவடம் பாதித்தோருக்கான மறுவாழ்வு மையம்: காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை, டிச.4: திருவண்ணாமலையில் மறுவாழ்வு மைய புதிய கட்டிடம் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில், ஒருங்கிணைந்த முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட பிரித்தி சீனிவாசன் என்பவர், ‘சோல் பிரி’ எனும் சேவை அமைப்பின் மூலம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து இந்த மையத்தை அமைத்திருக்கிறார். இந்த மையத்தில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுக்கான பயிற்சிகள், சிகிச்சை மற்றும் உதவிகள் வழங்கப்படுகிறது. அதற்கான பிரத்யேக கட்டமைப்பு வசதிகள் இந்த மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையத்தை, காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். அப்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மறுவாழ்வு மைய ஒருங்கிணைப்பாளர் பிரித்தி சீனுவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதையொட்டி, திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு, குத்து விளக்கேற்றி வைத்தார். நிகழ்ச்சியில், கலெக்டர் பா.முருகேஷ், எஸ்பி பவன்குமார், எம்எல்ஏ மு.பெ.கிரி, நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, அரசு மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் ஷகில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல், திருவண்ணாமலை தாலுகா மல்லவாடி கிராமத்தில் கடந்த 1971ம் ஆண்டு 14,300 சதுர அடி பரப்பளவில் 425 பேர் தங்கி பயன்பெறும் வகையில் அப்போதய முதல்வர் கலைஞரால் தொடங்கப்பட்ட தொழுநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தில் தற்போது, ₹1.64 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் 20 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 40 தொழுநோயாளிகள் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த மையத்தில் 36 பேர் உள்ளனர். இந்நிலையில், தொழுநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தையும் நேற்று காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதையொட்டி, மறுவாழ்வு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார். நிகழ்ச்சியில், கலசபாக்கம் ெதாகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அண்ணாமலை, ராமஜெயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: