குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், டிச.4 : முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகளில் நேற்று பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். கன்னியாகுமரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. காலை 10 மணியளவில்  நிர்வாக அலுவலக கட்டிடம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 80க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மருத்துவக்கல்லூரி உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை தவிர மற்ற அனைத்து மருத்துவ பணிகளையும்  பயிற்சி மருத்துவர்கள் புறக்கணித்தனர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கு கலந்தாய்வு நடத்தப்படாமல் இருப்பதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் வருங்காலத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும். எங்களது கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தற்போது பணி புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். இதில் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Related Stories: