பஸ் படிக்கட்டுகளில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்

பெரம்பலூர்,டிச.4: பொதுமக்கள், மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் 104 அரசு பஸ்களுக்கு அனுமதி சீட்டும், 87 தனியார் பஸ்களுக்கு அனுமதி சீட்டும், 82 மினி பஸ்களுக்கு அனுமதி சீட்டும் என மொத்தம் 273 பஸ்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு, வெளி மாவட்டங்களுக்கும், பெரம்பலூர் மாவட்டத்திற்குள்ளும் பல்வேறு வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சுமார் 600 பள்ளி வாகனங்களும் அனுமதிச்சீட்டு பெற்று இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த வாரத்தில் வேலூர் மாவட்டத்தில் பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்த மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர், போக்குவரத்து ஆணையர், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா, பெரம்பலூர் மற்றும் திருச்சி துணை போக்குவரத்து ஆணையர் ஆகியோரது உத்தரவுகன்படி கடந்த ஒரு வாரமாக அரசு பஸ்களில் படிக்கட்டில் நின்றபடி பயணம்செய்யும் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை ஒழுங்குபடுத்தி பஸ்சின் உட்புறம் செல்ல, தகுந்த அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து அரசு பஸ் மற்றும் தனியார் பஸ் கண்டக்டர்களும் தகுந்த பயணிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்  வெங்கட பிரியா உத்தரவின்படி நேற்று பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டு பகுதியில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வக்குமார், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராஜா, உதவிபொறியாளர் மனோஜ், சிவக்குமார் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் ஆகியோர் பொதுமக்கள், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். அதேபோன்று தனியார் பஸ் கண்டக்டர்களுக்கும் தகுந்த அறிவுரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற விழிப்புணர்வு நடத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும் என பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories: