கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுதொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகை, டிச.4: கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை தொழிலாளர்துறை அலுவலகம் முன் பொது தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வீரசெல்வன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்தை நலவாரிய நிதிக்கு வழங்க வேண்டும். குறைந்தபட்ச கூலியாக ஒரு நாளைக்கு ரூ.1,000 வழங்க வேண்டும். வீடு, கல்வி, மருத்துவ வசதிகளை இலவசமாக வழங்க வேண்டும். ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலையும், கூடுதல் நேர வேலைக்கு 2 மடங்கு கூலியும் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களை எஸ்.சி, எஸ்.டி என பிரித்து சாதி சான்று கேட்பதை கைவிட வேண்டும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசு அறிவித்தபடி கட்டுமான தொழிலாளர்களுக்கு 5 சென்ட் இடத்தில் சுகாதாரமான வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தம், சிதம்பரம், பால்ராஜ், ஆபிரகாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: