கம்புளியாம்பட்டி, வாழ்வார்மங்கலத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

தோகைமலை, டிச. 4: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கொசூர் ஊராட்சி கம்புளியாம்பட்டி அரசு நடுநிலைபள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி என்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அர்ச்சுனன் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்(பொ) பழனிச்சாமி, வட்டார வள மேற்பார்வையாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழகத்தில் ஏற்பட்ட கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆரம்ப பள்ளி மாணவ மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது பள்ளிகள் தொடங்கப்பட்டாலும் மாணவர்களின் கல்வி தரம் பின்தங்கி உள்ளது. மேலும் ஆரம்ப பள்ளி குழந்தைகள் சரிவர பள்ளிக்கு வராதநிலையும் தொடர்ந்து வருகிறது.

இதனை அடுத்து தமிழக அரசின் வழிகாட்டுதல்படி பள்ளி கல்விதுறை சார்பில் இல்லம் தேடி கல்வி விழிப்பணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதனால் பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளின் இல்லம் தேடி சென்று கல்வி வழிகாட்டுதல் செய்து பள்ளிக்கு வருவதற்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

இதன் மூலம் இல்லம் தேடி வரும் ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து தங்களது குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்த பெற்றோர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று நாடகம், பாட்டு, நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்தநிகழ்வில் பள்ளி ஆசிரியர் திருவேங்கடசாமி, எஸ்எம்சி தலைவர் உத்தமி, ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். கடவூர்: கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வாழ்வார்மங்கலம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தொடங்கி வைத்து விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்டப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்துப் பள்ளிகளிலும் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு கடவூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோர் வழிகாட்டுதல்படி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் இருதயசாமி வரவேற்று பேசினார். ஊராட்சி மன்றத் தலைவர் சரவணன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கல்யாணி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மலைக்கொழுந்தன், சரவணமுத்து ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றினர். தன்னார்வலராக ஜோதி, கலைச்செல்வி ஆகியோர் இத்திட்டத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆடல், பாடல், தப்பாட்டம் மூலம் கற்றல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories: