ஓடைகளில் நீர்வரத்து அதிகரிப்பு சதுகிரியில் பக்தர்களின்றி பூஜை

வத்திராயிருப்பு, டிச. 3: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. தற்போது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் 5ம் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து பிரதோஷத்தையொட்டி பக்தர்கள் சிலர் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு நேற்று சூடம் கொளுத்தி சாமி தரிசனம் செய்தனர். சிலர் மொட்டை போட்டு பொங்கல் வைத்தனர். பிரதோஷத்தையொட்டி மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம்,பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதன் பின் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் பக்தர்களின்றி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா(எ) பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர்.

திருவில்லி.யில் ஆலோசனை கொரோனாவை  கட்டுப்படுத்த 13வது தடுப்பூசி முகாம் டிச.4ம் தேதி நடைபெறுகிறது. இது  தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று  நடைபெற்றது. அதிகாரிகளுடன் சிவகாசி சப்-கலெக்டர்  பிரிதிவிராஜ் ஆலோசனை நடத்தினார். நகராட்சி கமிஷனர் மல்லிகா,  வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, தாசில்தார் ராமசுப்பிரமணியன் மற்றும்  வட்டார மருத்துவ அலுவலர் சபரீஷ், துணை வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், வட்ட  வழங்கல் அலுவலர் கோதண்டராமன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பால்துரை, நகர்  வருவாய் ஆய்வாளர் ஆனந்தகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

லாரி மோதி ெதாழிலாளி பலி

 ராஜபாளையத்தை அடுத்துள்ள நல்லமநாயக்கன்பட்டி விலக்கு கரிவலம்வந்தநல்லூரை சேர்ந்தவர் கணேசன்(35). இவர் முதுகுடி பகுதியில் தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று பணி முடிந்து டூவீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருநெல்வேலி சாலையில் சங்கரன்கோவிலிருந்து வந்த டிப்பர் லாரி மோதியதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு

சாத்தூரிலிருந்து இருக்கன்குடி செல்லும் ரயில்வேபீடர் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்வே மேம்பாலப்பணிக்காக ரயில்வேபீடர் சாலையில் உள்ள கடைகள் அகற்றப்படுவதாக ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று பாதையில் அதை அமைக்க வலியுறுத்தி கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன் மனு அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளிடம் தெரிவித்தனர். மேலும் ரயில்வே மேம்பாலம் அமைவதற்கான மாற்று பாதையையும் வியாபாரிகள் சங்கம் சார்பில் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

விருதுநகர்  மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 15.60லட்சம் பேர் உள்ளனர். இதில் முதல்  தவணையாக 12,13,813 பேருக்கும், 2வது தவணையாக 7,43,216 பேருக்கும்  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 100 சதவீத இலக்கை எட்டும்  வகையில் 13வது கொரோனா தடுப்பூசி முகாம் நாளை(டிச.4) சனிக்கிழமை காலை 9 மணி  முதல் மாலை 5 மணி வரை அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் உள்ள  அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்,  அரசு மருத்துவமனைகளில் முகாம் நடைபெற உள்ளது.

டூவீலர் மாயம்

சிவகாசி அருகே விஸ்வநத்தம் முருகையாபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் தன்னுடைய டூவீலரை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். காலையில் பார்த்தபோது டூவீலரை காணவில்லை. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

சிவகாசி அருகே வி.முத்துராமலிங்கபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் (28). கட்டிட தொழிலாளியான இவர் உசேன் காலனியில் உள்ள லிங்கராஜா வீட்டில் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி இறந்தார். மற்றொரு கட்டிட தொழிலாளி தங்கேஸ்வரன் (40) காயமடைந்தார். சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தோசைக்கல் திருடர்களுக்கு வலை

விருதுநகர் சத்திரரெட்டியபட்டி செக்போஸ்ட் அருகில் நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வராஜ்(42) ஹோட்டல் நடத்தி வருகிறார். நவ.29ல் உறவினர் துஷ்டி நிகழ்ச்சியில் பங்கேற்க கடையை மூடி சென்று விட்டார். உறவினர் ஒருவர் நேற்று முன்தினம் வேனில் வந்த 4 பேர் கும்பல் ஹோட்டலில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான தோசைக்கல்லை திருடி சென்றதாக போன் செய்துள்ளார். ரூரல் போலீசில் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில், தோசைக்கல் திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கஞ்சா வைத்திருந்த தாய், மகன் கைது

திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் உத்தரவின்பேரில் வன்னியம்பட்டி எஸ்ஐ கனகராஜ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வைத்திலிங்கபுரம் தெருவில் ஒரு வீட்டில் நேற்று கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், வீட்டில் இருந்த வைத்தியலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த வேலம்மாள்(55), அவரது மகன் மாயகிருஷ்ணன் (எ) மாயக்கண்ணன்(31) ஆகியோரை கைது செய்தனர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ஜோதிநிவாஸ் முன்னிலை வகித்தனர். சாத்தூர் நகர்மன்றத்தில் போட்டியிடுபவர்களிடம் பெற்ற விருப்பமனுவை மாவட்ட தலைவரிடம் வழங்குவது என்றும், கூட்டணிக்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றி நகராட்சி தேர்தல் வெற்றி பெறுவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Related Stories: