கம்பம் தொட்டம்மன்துறை தடுப்பணை கரைகளை பலப்படுத்தும் பணி விவசாயிகள் மகிழ்ச்சி

கம்பம், டிச. 3: கம்பம் சுருளி அருவி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றில் தொட்டம்மன்துறை தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து உத்தமுத்து கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் வகையில் மதகுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் பிரித்து விடப்படுகிறது. இந்த தண்ணீரானது அண்ணாபுரம், க.புதுப்பட்டி, உத்தமபாளையம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன நிலங்களுக்கு செல்கின்றன. இந்நிலையில் தடுப்பணையின் கரை கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சேதமடைந்தது. இதனால், முல்லைப்பெரியாறு தண்ணீரானது உத்தமுத்து கால்வாய்க்கு செல்லாமல் அருகே உள்ள வயல் வெளிகளுக்குள் புகுந்து தண்ணீர் வீணாகும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கம்பம் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், நேற்று கம்பம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரேம்குமார் தலைமையில் சேதமடைந்த கரையை தற்காலிமாக பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் குறைந்தவுடன் முழுமையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories:

More