வயலுக்கு சென்ற விவசாயி மர்ம சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

பரமக்குடி, டிச.3:  பரமக்குடி அருகே வயலில் வேலைக்கு சென்ற விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பரமக்குடி அருகே நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி  திருநாவுக்கரசு(42). இவர், நேற்று முன்தினம் வயலில் வேலை செய்வதற்காக சென்றவர்  வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடி போது, வயலின் அருகே கண் பகுதியில் ரத்த காயத்துடன் அவர், இறந்து கிடந்தார். நயினார்கோவில் போலீசார் திருநாவுக்கரசின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இறந்த திருநாவுக்கரசுக்கு மனைவியும், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் திருநாவுக்கரசு அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். கூடுதல் எஸ்பி ஜெய்சிங், தாசில்தார் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் திருநாவுக்கரசு உறவினர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். ஆனால், அவர்கள் மறியலை விலக்கி கொள்ளவில்லை. உடற்கூறு ஆய்வு முடிவின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி கூறியதையடுத்து மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இதற்கிடையே நான்கு  மருத்துவர்களை கொண்ட மருத்துவக் குழுவினர், திருநாவுக்கரசின் உடலை உடற்கூறு  செய்ததில் கொலை நடந்ததற்கான எந்த காயமும் இல்லை என உடற்கூறு  மருத்துவ  அறிக்கை கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

More