திருச்சியில் போக்குவரத்துத்துறை சார்பில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆர்டிஓவினர் பஸ்களில் திடீர் சோதனை

திருச்சி, டிச.3: பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு பஸ் மற்றும் பள்ளி பஸ்களில் அதிக மாணவர்களை ஏற்றி படிக்கட்டில் நின்றும், தொங்கி செல்வதை தடுக்க போக்குவரத்துத்துறை ஆணையர் மற்றும் துணை ஆணையர் உத்தரவின் பேரில் திருச்சியில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில் பறவைகள் சாலையில் உள்ள பள்ளி அருகே நேற்று போக்குவரத்துத்துறை ரங்கம் ஆர்டிஓ., குமார், திருச்சி மேற்கு ஆர்டிஓ., பிரபாகரன் ஆகியோர் தலைமையில் அரசு போக்குவரத்து திருச்சி மண்டல் மேலாளர் மற்றும் மாநகர போக்குவரத்து போலீசார் தலைமையில் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் அவ்வழியே வந்த அரசு மற்றும் தனியார் பஸ் படியில் நின்றும், தொங்கிக்கொண்டு சென்ற பள்ளி மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பஸ்களில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு செல்லக்கூடாது. ஓடும் பஸ்சில் ஏறவோ, இறங்கவோ கூடாது. அறிமுகம் இல்லாதவர்களிடம் லிப்ட் கேட்டு செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட படங்களுடன் கூடிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரம் வழங்கி அறிவுரை வழங்கினர்.

மேலும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடம் உரிய பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்களை ஏற்றி இறக்க வேண்டும். படியில் நின்று மற்றும் தொங்கிக்கொண்டு செல்லும் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளே நிற்குமாறு கூறவேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை வழங்கினர். தொடர்ந்து தனியார் பஸ்களில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories:

More