வேலூரில் லஞ்ச வழக்கில் கைதானவர் வருமானத்தை விட 430 சதவீதம் சொத்து சேர்த்ததாக பெண் அதிகாரி, கணவர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு: விஜிலென்ஸ் போலீசார் விசாரணை

வேலூர், டிச.3: வேலூரில் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட செயற்பொறியாளர் ஷோபனா, அவரது கணவர் நந்தகுமார் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தனியாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூரில் உள்ள மண்டல தொழில்நுட்ப கல்வி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் செயற்பொறியாளராக இருந்தவர் ஷோபனா(57). இவர் தீபாவளி பண்டிகை வசூலில் ஈடுபட்டதாக வந்த புகாரின்பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனையிட்டு காரில் இருந்த 5 லட்சம், பெரியார் அரசு பாலிடெக்னிக் வளாக குடியிருப்பில் ஷோபனா தங்கிய வீட்டில் இருந்து கணக்கில் வராத 15.85 லட்சம், 3.92 லட்சம் மதிப்புள்ள 3 காசோலைகள், 18 ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள வீட்டில் கிருஷ்ணகிரி விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தி தங்கம், வெள்ளி, 11 வங்கி கணக்கு புத்தகம், 2.27 கோடியை பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் ஷோபனா, திருச்சி வட்ட கட்டிடங்கள் பராமரிப்பு உதவி கண்காணிப்பு பொறியாளராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. 2.27 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஓசூர் வீட்டில் ஷோபனாவை வேலூர் விஜிலென்ஸ் போலீசார் கடந்த 30ம் தேதி கைது செய்து மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 1ம்தேதி முதல் 2021ம் ஆண்டு நவம்பர் 15ம்தேதி வரை உள்ள காலக்கட்டத்தில் செயற்பொறியாளர் ஷோபனா மற்றும் அவரது கணவர் நந்தகுமார் ஆகியோர் வருமானத்தை விட 2 கோடியே 65 லட்சத்து 96 ஆயிரத்து 470க்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தெரியவந்தள்ளது. இது ஷோபனா மற்றும் அவரது கணவர் இருவரின் வருவமானத்தை காட்டிலும் 430 சதவீதம் கூடுதலாகும். இதையடுத்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஷோபனா, அவரது கணவர் நந்தகுமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் ஷோபனா மற்றும் அவரது கணவர் நந்தகுமாரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: