வேலூரில் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி 5 கோடி மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியை கைது: மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

வேலூர், டிச.3: வேலூரில் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி 5 கோடி மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியை மகேஸ்வரியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மகேஸ்வரி (53). அவரது கணவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் (59). மற்றும் தோட்டப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை லதா (55) ஆகிய 3 பேரும், வேலூர் தொரப்பாடி ஜீவா நகரை சேர்ந்த மலர்க்கொடி(50), கொசப்பேட்டையை சேர்ந்த தமிழ்செல்வி(59), காட்பாடி திருநகர் விவேகானந்தர் நகரை சேர்ந்த ஜான்சிராணி(45) ஆகியோருக்கு அறிமுகம் ஆகி உள்ளனர்.

அப்போது ஆசிரியை மகேஸ்வரி உட்பட 3 பேரும் சேர்ந்து மலர்க்கொடி, தமிழ்செல்வி ஜான்சிராணி ஆகியோரிடம் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம் பெற்றுள்ளனர்.

அதன்படி, மலர்க்கொடியிடம் 45 லட்சமும், ஜான்சிராணியிடம் 2 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரமும், தமிழ்ச்செல்வியிடம் 2 கோடியே 50 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் அதிக வட்டியும், அசல் தொகையும் கொடுக்கவில்லையாம். இதனால் அதிர்ச்சி அடைந்த 3 பேரும் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். விரைவில் தருவதாக தட்டிக்கழித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பணத்தை கொடுக்க முடியாது என்று ஆசிரியை மகேஸ்வரி உட்பட 3 பேரும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மலர்க்கொடி உள்ளிட்ட 3 பேரும் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அந்த புகார்களின் பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மகேஸ்வரி, தர்மலிங்கம், லதா மற்றும் உடந்தையாக மகேஸ்வரியின் மகள்கள் 2 பேர் என மொத்தம் 5 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று ஆசிரியை மகேஸ்வரியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமை மறைவாக உள்ள ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், மற்றொரு ஆசிரியை லதா ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மகேஸ்வரியின் மகள்கள் இருவரும் முன்ஜாமீன் பெற்று உள்ளதால் அவர்களை போலீசார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், புகார் அளித்துள்ளவர்களில் ஒருவரான ஜான்சிராணியும் ஆசிரியை. அவர் கொணவட்டம் அரசு பள்ளியில் பணியாற்றும்போது சக ஆசிரியையான மகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி அவர்களது நட்புவட்டாரத்தை விரிவுபடுத்தி அதன்பிறகே 2020ம் ஆண்டு முதல் அதிகவட்டி ஆசை வார்த்தை கூறி ஆசிரியை ஜான்சி ராணி உட்பட 3 பேரிடம் மகேஸ்வரி பணத்தை பெற்றுள்ளார். அரசு பள்ளி ஆசிரியை மோசடி புகாரில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: