சேத்துப்பட்டு, டிச.3: சேத்துப்பட்டு பேரூராட்சியில் பழுதடைந்த நீர்தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். சேத்துப்பட்டு பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. 7-வது வார்டில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. கண்ணனூர் ஏரியில் உள்ள கிணற்று நீரை தொட்டியில் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள், ‘எங்களுக்கு செய்யாற்று குடிநீர் அல்லது நமத்தோடு-சேத்துப்பட்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வரும் ஆற்று நீரை நீர்தேக்கத் தொட்டியில் ஏற்றி வழங்குங்கள். ஏரியில் உள்ள கிணற்று நீர் வேண்டாம்’ என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கடந்த 25 ஆண்டுகளாக நீர் தேக்கத் தொட்டி பயன்பாட்டுக்கு இல்லாமல் பாழடைந்து காணப்படுகிறது.