பைக் மீது வாகனம் மோதி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பலி

ஓசூர், டிச.3: ஓசூர் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள செங்கோட்டை நகர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலுசாமி(34). மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரான இவர், பெங்களூரு யூனிட்டில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பத்தலப்பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த வேலுசாமி, சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், ஓசூர் ஹட்கோ போலீசார் விரைந்து சென்று வேலுசாமி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

Related Stories:

More