மாவட்டத்தில் இதுவரை 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தர்மபுரி, டிச.3: தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார். தர்மபுரி மாவட்டத்தில் 455 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. மாதேமங்கலம், தம்மணம்பட்டி, அப்பனஅள்ளிகோம்பை ஆகிய இடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களை, கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை (டிசம்பர் 1ம் தேதி) முதல் தவணை கொரோனா தடுப்பூசி 8,41,403 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 4,04,827 பேருக்கும் என மொத்தம் 12,46,230 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 70 சதவீதத்திற்கு மேல் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 34 சதவீதம் நபர்கள் மட்டும்தான், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் 3,61,697 பேர் முதல் தவணை தடுப்பூசிக் கூட செலுத்திக்கொள்ளவில்லை. எனவே, கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்ட பொதுமக்கள், சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு, கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு, தர்மபுரியை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நேற்று 455 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக முகாம் நடந்த ரேஷன் கடைகளில், பொருட்கள் சரியாக விநியோகம் செய்யப்படுகிறதா? என்றும், உணவுப் பொருட்கள் தரமாக உள்ளதா எனவும் கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, அப்பனஅள்ளி கோம்பை அங்கன்வாடி மையத்தில் உணவுக்கூடத்தை பார்வையிட்டு, உணவு தரமானதாக சமைக்கப்படுகிறதா என பார்வையிட்டு குழந்தைகளிடம் கலெக்டர் கலந்துரையாடினார்.  ஆய்வின் போது, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) சவுண்டம்மாள், வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், துணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: