விழுப்புரத்தில் பரபரப்பு ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி டிரைவர் பரிதாப பலி

விழுப்புரம், டிச. 3: விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஊரல் கரைமேடு பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் அர்ச்சுனன் (28). இவருக்கு திருணமாகி ஒன்றரை வயதில் கபிலன் என்ற மகன் உள்ளார். நேற்றிரவு அர்ச்சுனன் விழுப்புரம் பகுதியில் இருந்து பானாம்பட்டு ரோட்டில் உள்ள ஆட்டோ நிறுத்தத்துக்கு செல்வதற்காக ஆட்டோவில் சவிதா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் அர்ச்சுனன் பேருந்தின் பின்சக்கரத்தில் மாட்டிக்கொண்டு தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பேருந்து டிரைவரை மடக்கி பிடிக்க முயன்றனர். இச்சம்பவத்தால் அச்சம் அடைந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய 2 பேரும் அருகில் உள்ள விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உறவினர்கள் பேருந்தின் அனைத்து கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். தொடர்ந்து ஆத்திரம் அடங்காத அவர்கள் பேருந்துக்கும் தீவைத்தனர்.

பயணிகளும் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் மற்றும் விழுப்புரம் தீயணைப்பு துறையினர் ஆகியோர் உடனடியாக பேருந்து மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அப்போது அங்கிருந்த அர்ச்சுனனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த டிரைவர், நடத்துனர் ஆகிய 2 பேரையும் சம்பவ பகுதிக்கு அழைத்து வரவேண்டும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை அர்ச்சுனன் உடலை எடுக்கவிட மாட்டோம் என கூறினர். இதையடுத்து அப்பகுதியில் அதிரடியாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, இறந்தவரின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.  இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். தொடர்ந்து அர்ச்சுனனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் விபத்து நடந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் பேருந்து மோதி ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: