பாலியல் குற்றங்களுக்கு எதிராக தயங்காமல் புகார் அளிக்க வேண்டும்

திருப்பூர்,டிச.3:பாலியல் குற்றங்களுக்கு எதிராக தயங்காமல் புகார் அளிக்க வேண்டுமென கே.வி.ஆர். நகர் சரக உதவி கமிஷனர் வரதராஜன் மாணவிகளுக்கு அறிவுரை கூறியுள்ளார். திருப்பூர் மாநகர காவல் துறையினர் சார்பில் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினம் தலைமை வகித்தார். தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிச்சையா மாணவிகளிடம் பாலியல் குற்றங்கள் குறித்தும் புகார் அளிப்பது குறித்தும் பேசினார். மேலும் பாடங்கள் சமந்தமான சில கேள்விகளுக்கு பதிலளித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் கே.வி.ஆர் நகர் சரக உதவி கமிஷ்னர் வரதராஜன் பேசியதாவது: தற்போது தொடர்ந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருகிறது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகின்றோம். மேலும் பல குற்றங்கள் வெளியில் வராமல் மறைந்து விடுகிறது. பாலியல் குற்றங்களுக்கு எதிராக தயங்காமல் புகார் அளிக்க வேண்டும். புகார் அளிப்பவரின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும். எந்த சூழலில் மாணவிகள் பாதிக்கப்பட்டாலும் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.  மேலும் மாணவிகள் வரும் வழியிலோ, வீட்டருகிலோ, பள்ளியிலோ யார் பாலியல் ரீதியாத தொந்தரவு கொடுப்பதாக நினைத்தாலும் உடனே புகார் தெரிவிக்க வேண்டும். அதே போல மாணவ,மாணவிகள் பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: