வேதாரண்யத்தில் 32 இடங்களில் இல்லம் தேடி கல்வி துவக்க விழா முதன்மை கல்வி அலுவலர் பங்கேற்பு

வேதாரண்யம், டிச.3: வேதாரண்யத்தில் மொத்தம் 32 இடங்களில் இல்லம் தேடி கல்வி தொடக்க விழா நேற்று நடந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களில் மன அழுத்தத்தைப் போக்குவதற்கும், பாடசுமையை குறைப்பதற்காகவும் தமிழக முதலமைச்சர் இல்லம் தேடி கல்வியை தொடங்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தன்னார்வலர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாலை நேர வகுப்புகள் எடுக்க பயிற்சி அளிக்கப்பட்டு நேற்று நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 32 இடங்களில் இல்லம் தேடி கல்வி தொடக்க விழா நடைபெற்றது.

இதில் புஷ்பவனம் பகுதியில் உள்ள பட்டணத்தெரு, ராம மடம், கொத்தங்காடு ஆகிய மூன்று தொடக்கப் பள்ளிகளில் இல்லம் தேடி கல்வி தொடக்க விழாவை நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் மற்றும் மாணவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். அப்போது மாணவர்களுக்கு குல்லா பாடல்கள் மூலம் ஆசிரியர்கள் மகிழ்வித்தனர். பெற்றோர்களுக்கு இல்லம் தேடி கல்வி குறித்து கரகாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், தன்னார்வலர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: