நாகை மாவட்டத்தில் 100% மானியத்தில் ஆடுகள் பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

நாகை, டிச.3: நாகை மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் ஆடுகள் பெறும் திட்டத்திற்கு வரும் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கு கிராம ஊராட்சி பகுதிகளில் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 600 பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதியில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் தேர்வு செய்யப்படுவர். அப்பயனாளிகள் நிலமற்ற ஏழை விவசாயிகளாக இருக்கவேண்டும்.

அவர்களது குடும்ப அட்டையில் உள்ளவர்களுக்கும் சொந்தமாக நிலம் இருத்தல் கூடாது. சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியில நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். பயனாளிகளுக்கு 60 வயதிற்கு மிகக்கூடாது. அவர்களுக்கு தற்போது சொந்தமாக மாடு, ஆடுகள் இருக்கக்கூடாது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுபவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மத்திய, மாநில அரசுப்பணிகளிலோ, அரசு சார்ந்த நிறுவனங்களிலோ, கூட்டுறவு சங்கங்களிலோ பணிபுரியக்கூடாது, எவ்வித உள்ளாட்சி அமைப்புகளிலோ உறுப்பினராக இருக்கக்கூடாது. கடந்தாண்டுகளில் செயல்படுத்தப்பட்ட விலையில்லா கறவைப்பசுக்கள் வழங்கும் திட்டம், விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் மற்றும் ஊரக புறக்கடை வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற்றவராக இருத்தல் கூடாது.

தகுதியான வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகாமையில் உள்ள கால்நடை மருந்தகங்களில் இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட விஏஓவிடம் நிலமற்ற ஏழைக்கான சான்றினைப் பெற்று சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவரிடம் வரும் 9ம் தேதிக்குள் அளித்து இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: