வாக்களித்தவர்களுக்கு வஞ்சகம் செய்கிறது புதுச்சேரி அரசு

காரைக்கால், டிச.3: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு கூட்டம் காரைக்காலில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் வின்சென்ட், மாவட்ட செயலாளர் தமீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்திய தணிக்கை குழு கூறியுள்ள படி அரசு நல திட்டங்கள் புதுச்சேரி மாநிலத்தில் தகுதியான ஏழை மக்களுக்கு அரசியல் சிபாரிசு இன்றி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஆனால் காரைக்காலில் எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் சட்டமன்ற உறுப்பினர்கள் சிபாரிசுகளுடனும் அரசியல் பாரபட்சத்துடனும் தகுதியற்றவர்களுக்கு நலதிட்டங்கள் வழங்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் 25% பேருக்கும் மேலாக அரசு சலுகைகளைப் பெற தகுதியான ஏழை மக்களாக இருந்தும் அவர்களுக்கு சிவப்பு நிற ரேஷன் கார்டுகள் வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

சிவப்பு நிற ரேஷன் கார்டுகள் கேட்டு அவர்கள் விண்ணப்பிக்கும்போது வருமானச் சான்று கேட்டு அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதனை நிறுத்தி சிவப்பு நிற ரேஷன் கார்டுகளை உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிருக்கு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். தீபாவளிக்கு புதுச்சேரி அரசு அறிவித்த 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சீனி மற்றும் மழைக்கால நிவாரணமாக அனைவருக்கும் 5000 ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் எல்லாமே ஏட்டளவிலேயே இருந்துவருகிறது. அவைகள் வெற்று அறிவிப்புகளாகவே உள்ளன. இதனால் வாக்களித்த மக்களுக்கு புதுச்சேரி அரசு ஏமாற்றத்தையே அளித்து வருகிறது. இதனை கண்டித்தும் புதுச்சேரி அரசு அறிவித்த திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரியும் வரும் 5ம் தேதி காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories: