நெற்கதிர்களுக்கு உரம் தெளிக்கும் விவசாயி 100 சதவீத மானியத்தில் ஆடுகள் பெற

கரூர், டிச. 3: கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 2021- 22ம் ஆண்டு ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 1 ஊராட்சிக்கு 100 பெண் பயனாளிகள் வீதம் 800 பயனாளிகள் தேர்வு செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இதன்கீழ் பயன்பெறும் பயனாளிகள் நிலமற்ற விவசாய தொழில் புரிபவராக இருக்க வேண்டும். பெண் பயனாளிகள் அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். பெண் பயனாளி 60 வயதுக்கு கீழ் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

பெண் பயனாளி சொந்தமாக கறவை பசுக்களை, வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வைத்திருக்க கூடாது. பயனாளி மிகவும் ஏழையாகவும், அவர்கள் குடும்பத்தினர் எவரும் மத்திய, மாநில அரசு பணியில் இருக்க கூடாது. அல்லது வேறு எந்த நிறுவனம், கூட்டுறவு துறை உள்ளாட்சி துறைகளில் உறுப்பினராக இருக்க கூடாது. இலவச கறவை பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் ஊரக புறக்கடை மேம்பாட்டுத் திட்டத்தில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பயன் பெற்றிருக்க கூடாது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் 30 சதவீதம் இருக்க வேண்டும்.இந்த தகுதிகள் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் டிசம்பர் 9ம் தேதிக்குள் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட கலெக்டரால் அமைக்கப்படும் அலுவலர்கள் அடங்கிய தேர்வுக் குழுவின் மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: