கன்னிகைப்பேர் பகுதியில் சென்னை - திருப்பதி சாலையில் ஓடிய நீர் வடிந்தது: சீரமைப்பு பணிகள் தொடங்கின

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் சென்னை - திருப்பதி சாலையில் பாய்ந்த ஏரி நீர் வடிந்ததால், சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கின. பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வடமதுரை, ஜெயபுரம், ஆலப்பாக்கம், அத்திவாக்கம் ஆகிய பகுதிகளில் பெய்த மழை நீர் வரத்தால் ஏரி நிரம்பியது. இதனால், இதன் உபரி நீர் வெளியேறி சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களாக சாலையில் பாய்ந்தது.

இதனால், சென்னை கோயம்பேடு, செங்குன்றம் ஆகிய பகுதிகளில் இருந்து பெரியபாளையம் நோக்கி வரும் வாகனங்களும், ஆந்திர மாநிலம் திருப்பதி, புத்தூர் மற்றும் ஊத்துக்கோட்டையில் இருந்தும் சென்னை சென்ற வாகனங்களும் கன்னிகைப்பேர் ஏரிக்கரை அருகே செல்லும் போது ஏரிநீர் சாலையின் இருபுறமும் செல்வதாலும், சாலையில் ஏற்பட்ட பள்ளத்தாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையறிந்த பெரியபாளையம் போலீசார் கன்னிகைப்பேர் பகுதிக்கு வந்து போக்குவரத்தை சீரமைத்தனர்.

பின்னர், நேற்று சாலையில் சென்ற ஏரிநீர் வடிந்ததால் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் நெடுஞ்சாலை துறையினர் செம்மண் கொட்டி பள்ளத்தை சீரமைத்தனர். மேலும், கன்னிகைப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏரியில் இருந்து சென்ற உபரி நீர் புகுந்தது. இதனால், கன்னிகைப்பேர் பள்ளி வளாகத்தில் உபரி நீர் குளம்போல் தேங்கி நின்று காட்சியளித்தது. இதனால், நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று மீண்டும் பள்ளி வளாகத்தில் ஊற்றுநீர் சுரந்து தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், நேற்றும் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. பள்ளியின் சார்பில் நேற்று பள்ளியின் தலைமையாசிரியர், பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் ஆ.சத்தியவேலு ஆகியோர் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர்.

Related Stories:

More