வாகனத்தில் சுற்றும் ‘ஆடு திருடும் கும்பல்’

கோவை, டிச.3: கோவை மாவட்டத்தில் ஆடு திருடும் கும்பல் அட்டகாசம் அதிகமாகி விட்டது. காரமடை, பெரியநாயக்கன்பாளையம், சூலூர், மதுக்கரை, செட்டிபாளையம், கோவில்பாளையம், அன்னூர் வட்டாரங்களில் ஆடுகள் காணாமல் போவதாக புகார் அதிகமாகியுள்ளது. பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் தெரிவித்தால், போலீசார் வழக்குப்பதிவு செய்ய தாமதம் காட்டி வருகின்றனர். போலீசார், ‘‘நீங்கள் சொல்வது உண்மையா, பொய்யா? என எங்களுக்கு எப்படி தெரியும், நீங்கள் ஆட்டை பொது இடத்தில் விட்டு விடக்கூடாது. தனி அறையில் அடைத்து பூட்டு போட்டு அடைக்கவேண்டும். திறந்த பகுதியில் விட்டு விட்டு எங்களை வந்து தேட சொன்னால் எப்படி கண்டுபிடிப்போம்’’  எனக்கூறி அனுப்பி வைப்பது வாடிக்கையாகி விட்டது.

மாவட்டத்தில் தினமும் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. வேன், டெம்போ போன்றவற்றில் ஆடு திருடும் கும்பல் நள்ளிரவில் சுற்றுவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆட்டை திருடி அதிகாலை நேரத்தில் மட்டன் கடையில் விற்பனை செய்து வருகின்றனர். ஆடுகளுக்கு அதிக தொகை கிடைப்பதால், இரும்பு திருட்டு, வீட்டு உபயோக பொருட்கள் திருட்டு, நகை திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டு வந்த திருடர்கள் கூட தற்போது ‘ஆடு களவாடுவதில்’ ஆர்வம் காட்டி வருவதாக தெரியவந்துள்ளது. ஆடு திருடும் கும்பல் கையில் கத்தி, அரிவாள் வைத்திருப்பதாகவும், பொதுமக்கள் விரட்டி வந்தால் ஆயுதங்களை காட்டி மிரட்டி தப்புவதாகவும் தகவல் வௌியாகியுள்ளது. போலீசார் நள்ளிரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தி ஆடு திருடும் கும்பலை பிடிக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories:

More