உரிமம் புதுப்பிக்காமல் இயங்கிய தியேட்டருக்கு சீல்

ஈரோடு, டிச.3: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தியேட்டர்கள் கடந்த ஏப்.23ம் தேதி முதல் மூடப்பட்டது. பின்னர், கொரோனா பரவல் குறைந்ததையொட்டி கடந்த ஆக.23ம் தேதி முதல் அரசு உத்தரவின்பேரில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.  இந்நிலையில், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி தியேட்டர் உரிமையாளர்கள் உரிமத்தை புதுப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதுதொடர்பாக அந்தந்த வருவாய் கோட்டாட்சியர்கள் (ஆர்டிஓ) சம்மந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விநியோகித்தனர்.  இந்நிலையில், ஈரோடு மாநகரில் உள்ள ஒரு பிரபல தியேட்டர் கடந்த ஓராண்டாக உரிமத்தை புதுப்பிக்காமல் புதிய படங்களை திரையிட்டு வந்தது. இதையடுத்து உரிமத்தை புதுப்பிக்க கோரி எச்சரிக்கை நோட்டீஸ் ஈரோடு வருவாய் துறையினர் சார்பில் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, ஆர்.டி.ஓ., பிரேமலதா தலைமையில் தாசில்தார் பாலசுப்பிரமணியம், வருவாய் துறை அதிகாரிகள் நேற்று மதியம் சம்மந்தப்பட்ட தியேட்டரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தியேட்டருக்கு உரிமம் பெறாமல் இயக்கி வந்ததை உறுதி செய்து, தியேட்டருக்கு சீல் வைக்க ஆர்டிஓ உத்தரவிட்டார். அதன்பேரில், வருவாய் துறையினர் தியேட்டருக்கு சீல் வைத்தனர்.  இதுகுறித்து தாசில்தார் பாலசுப்பிரமணியம் கூறுகையில்,``தியேட்டர்களுக்கு ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனால், சீல் வைக்கப்பட்ட தியேட்டர், கடந்த ஓராண்டாக உரிமத்தை புதுப்பிக்கவில்லை. தியேட்டர் உரிமையாளர் உரிமத்திற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறினார். அதற்கான ஆவணத்தை எங்களிடம் சமர்ப்பிக்காததால் ஆர்டிஓ உத்தரவின்பேரில் தியேட்டருக்கு  சீல் வைக்கப்பட்டது’’ என்றார்.

Related Stories:

More