கனிம வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தர்ணா

ஈரோடு, டிச.3:  ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கனிம வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக அளித்த மனுவை அதிகாரி பெறாததால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் 7வது மாடியில் உதவி இயக்குனர் (கனிம வளம்) அலுவலகம் செயல்பட்டு வருகிறது.  இந்த அலுவலகத்தில் நேற்று மதியம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனு வழங்க வந்தார்.  அப்போது அங்கிருந்த உதவி இயக்குனர், அம்மனுவை வாங்க மறுத்து அலுவலகத்தில் இருந்து வெளியேறி விட்டார். அதிகாரி மனுவை பெறாமல் சென்றதை பார்த்து அதிருப்தி அடைந்த முகிலன், உதவி இயக்குநர் அலுவலக நுழைவு வாயிலிலேயே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முகிலனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அலுவலக புவியியலாளர் அலுவலர்கள், முகிலனிடம் வருத்தம் தெரிவித்து, மனுவை பெற்றுக்கொண்டனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு எழுந்து சென்றார். இதுகுறித்து முகிலன் கூறுகையில்,``ஈரோடு மாவட்டத்தில் முறையாக அனுமதி பெற்று செயல்படும் குவாரிகள், கல் உடைக்கும் இடங்கள் உள்ளிட்ட விபரங்களை தனக்கு வழங்க வேண்டும். குவாரி உள்ளிட்டவை பெற்றுள்ள அனுமதிக்கான நாட்கள் உள்ளிட்ட விபரங்களை கேட்டு, தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுவாக நேரில் வழங்க வந்தேன். ஆனால், அதிகாரி மனுவை வாங்காமல் எழுந்து சென்றதால் போராட்டத்தில் ஈடுபட்டேன்’’ என்றார்.

Related Stories: