படூர் ஊராட்சியில் கால்வாய்களை ஆக்கிரமித்த கட்டிடங்கள்: கலெக்டர் ஆய்வு

திருப்போரூர்: படூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களால் தொடர்ந்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார். திருப்போரூர் ஒன்றியம் படூர் ஊராட்சியில் இதுவரை வெள்ளம் வடியாமல் பல்வேறு பகுதிகளில் ஆறாக ஓடுவதால், ஓஎம்ஆர் சாலையில் மழைநீர் வெள்ளமாக செல்கிறது. இதற்கு பல நீர் வரத்து கால்வாய்களின் ஆக்கிரமிப்பே காரணம் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, கலெக்டர் ராகுல்நாத் படூர் ஊராட்சியில் வெள்ளநீர் வடியாமல் உள்ள தெருக்களில் ஆய்வு செய்தார்.

அப்போது, திட்டமிடப்படாமல் பல்வேறு வீட்டு மனைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டு இருப்பதையும், மழைநீர் வடிகால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள், தெருக்கள் அமைத்து இருப்பதையும், அங்கீகாரம் பெற்ற கட்டிடங்கள், மனைப்பிரிவுகள் ஆகியவை உரிய நிபந்தனைகளை பின்பற்றாமல் விதிகளை மீறி செயல்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை இணைந்து படூர் ஊராட்சியில் உள்ள பாசன வாய்க்கால்கள், மழைநீர் வடிகால்வாய்கள், தெருக்கள், ஏரி ஆகியவற்றின் வரைபடத்தில் உள்ளபடி இருப்பதை உறுதி செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

படூர் பகுதியில் அமைந்துள்ள செட்டிநாடு மருத்துவமனை வாயிலில், காட்டாற்று வெள்ளம் போல் வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த பகுதியையும் கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால்வாய்களை மருத்துவமனை நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி பொதுப்பணி மற்றும் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது திருப்போரூர் ஒன்றியக் குழுத்தலைவர் இதயவர்மன், படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர், கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் ஆகியோர் இருந்தனர்.

Related Stories: