மழையின் காரணமாக நிறுத்தப்பட்ட ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தை அளவீடு பணி மீண்டும் தொடக்கம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் ஆளவந்தார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடற்கரையோரத்தில் சவுக்கு கன்று பயிரிட்டு பராமரித்து வந்தார். இதையடுத்து, இவரது சேவையை பாராட்டி ஆங்கிலேயர்கள், ஆளவந்தாருக்கு இலவசமாக 1000 ஏக்கர் நிலத்தை வழங்கினர். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. பின்னர், ஆளவந்தார் பல ஆண்டுகளுக்கு முன் அவர் இறக்கும் நிலையில், நான் இறந்த பின்பு இந்த சொத்துக்கள், அனைத்தும் தர்ம சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என உயில் எழுதி வைத்தார். அதன்பிறகு அவர் காலமானார்.

இந்த, சொத்துக்கள் மூலம் வரும் வருவாயில், மாமல்லபுரம் ஸ்ரீ ஸ்தலசயன பெருமாள், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள், திருப்பதியில் உற்சவம் நடக்கும்போது, அன்னதானம் வழங்க வேண்டும் என உயில் சாசனத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனால், இவரது, சொத்துக்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத் துறை பாதுகாத்து பராமரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆளவந்தாருக்கு சொந்தமான நிலத்தை, சிலர் போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்ய முயற்சித்தனர். இதையறிந்த ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை அளவீடு செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் ஆளவந்தாருக்கு சொந்தமான சொத்துக்களை அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலைய துறைக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்பேரில், அளவீடு செய்யும் பணி நடந்து வந்தது. சமீபத்தில், வடகிழக்கு பருவமழையால், நில அளவீடு செய்யும் பணி தடைபட்டது. இதையடுத்து, நேற்று மீண்டும் மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் கிராமத்தில் 68 ஏக்கர் நிலம் அளவீடு செய்யும் பணி துவங்கியது. அப்பாது, திருப்போரூர் தாசில்தார் ராஜன், மண்டல துணை தாசில்தார் தமிழரசன், இந்து சமய அறநிலைய துறை தாசில்தார் மணி, ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் சங்கர் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories:

More