இல்லம் தேடி கல்வித்திட்டம் துவக்கம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே குண்ணம் நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வித்திட்டம் துவக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக திறக்காமல் இருந்தன. இந்த கால கட்டத்தில் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. இதனால் நேரடி கற்பித்தலுக்கு இணை இல்லாததால், பெரும்பாலான குழந்தைகளின் கற்றலில் கடும் சவால்கள் ஏற்பட்டன. இதையடுத்து, 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரிசெய்ய ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் குண்ணம் அரசினர் நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட துவக்க விழா நடந்தது. குண்ணம் ஊராட்சி தலைவர் தமிழ் பார்த்திபன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ருக்மணி வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட கவுன்சிலர் ராமமூர்த்தி, பால்ராஜ், துணைத்தலைவர் மாலதி போஸ்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ செல்வப் பெருந்தகை, இல்லம் தேடி கல்வி திட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, தன்னார்வலர்கள் கல்வி விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் கல்வி அலுவலர் சுகானந்தம், பள்ளி துணை ஆய்வாளர் சத்தியமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர் காஞ்சனா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாரதிராஜா, மாவட்ட துணை அமைப்பாளர்கள் குண்ணம் முருகன், பொடவூர் ரவி, சந்தவேலூர் சத்யா, ஒன்றிய அமைப்பாளர்கள் குமார், டான்போஸ்கோ ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பொடவூர் அரசினர் நடுநிலைப் பள்ளியில், ‘இல்லம் தேடி கல்வி திட்டம்’ துவக்க விழா நடந்தது. பொடவூர் ஊராட்சி தலைவர் ஜீவா ரவி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட கவுன்சிலர் பால்ராஜ், ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி போஸ்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு, நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கினார். மேலும், கல்வி கற்பிக்க உள்ள தன்னார்வலர்கள் அறிமுகம் செய்யபட்டனர். விழாவில், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பொடவூர் ரவி, குண்ணம் முருகன், சந்தவேலூர் சத்யா, ஒன்றிய அமைப்பாளர்கள் வல்லக்கோட்டை குமார், டான்போஸ்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மானாம்பதியில் இல்லம் தேடி கல்வி திட்டம் துவங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட, காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு பணி ஆணையினையும் வழங்கினார். இதில்,  மாவட்ட திட்ட அலுவலர் மணிவேல், வட்டார கல்வி அலுவலர்கள் சேஷாத்திரி, ஜெயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் ராதா வரவேற்றார். கற்பிக்க நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் தரமான கல்வி அளிப்பதாகவும், மாணவர்களை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து மாணவர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.  வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

கூடுவாஞ்சேரி: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி திட்ட நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் டி.தமிழ்அமுதன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் அமுதா செல்வம், வட்டார கல்வி அலுவலர்கள் பாலாமணி, வசந்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் புனிதகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் மலர்விழி தமிழ்அமுதன் வரவேற்றார். ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வபெருந்தகை இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம், தொண்டாங்குளம் கிராமத்தில், தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் துவக்க விழாவுக்கு தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். இத்திட்டம் குறித்து ஆடல், பாடல்களுடன் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொண்டாங்குளம் ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி, தேவரியம்பாக்கம் பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: