அமைச்சரின் துரித நடவடிக்கையால் படிப்படியாக வடிந்து வரும் வெள்ளநீர் 90 சதவீத சம்பா நெற்பயிர்கள் தப்பின

காட்டுமன்னார்கோவில், டிச. 2: காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் 6,400 ஹெக்டேர், குமராட்சி ஒன்றியத்தில் 11,300 ஹெக்டேர் மற்றும் முஷ்ணம் ஒன்றியத்தில் 11,200 ஹெக்டேர் என நடப்பு ஆண்டு 28,900 ஹெக்டேர், அதாவது 45,700 ஏக்கரில் சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மேற்கண்ட பகுதி கிராம விவசாய நிலங்களில் வெள்ளநீர் தேங்கியது. பயிர்கள் பூ வைக்கும் தருவாயில் மழை பொழிவுகள் தொடர்ந்து இருந்ததால் விவசாயிகள் சம்பா பயிர் குறித்து கவலையில் இருந்தனர். தற்போது விவசாய நிலங்களில் தண்ணீர் வடிந்து வருகிறது. கடந்த ஆண்டு சம்பா பயிர் செய்யப்பட்டதில், 60 சதவீதத்துக்கு மேல் சேதமடைந்தன. இந்த ஆண்டு சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் கடைமடை வரை முறையாக தண்ணீர் சென்றது. இதனால் விவசாயிகள் சரியான நேரத்தில் விதைப்பு செய்தனர்.

இதன் காரணமாகவே தற்போது பயிர்கள் தப்பி பிழைத்துள்ளன. முஷ்ணத்தில் நெடுஞ்சேரி, சாத்தாவட்டம், வக்காரமாரி ஆகிய பகுதிகளில் 150 ஏக்கர், குமராட்சியில் அம்மாபேட்டை, நந்திமங்கலம் உள்ளிட்ட 5 கிராமங்களில் 100 ஏக்கர், காட்டுமன்னார்கோவிலில் நாட்டார்மங்கலம், வீராணநல்லூர், பழஞ்சநல்லூர் பகுதியில் 130 ஏக்கரிலான நிலத்தில் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. அடுத்த இரு நாட்கள் மழை பெய்யவில்லை எனில் அவைகளும் வற்றிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வீராணம் ஏரி பாசன தலைவர் பாலு கூறுகையில், தமிழக அரசு சிறப்பான வடிகால் திட்டத்தை செயல்படுத்தியதன் விளைவாக காட்டுமன்னார்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் 90 சதவீதத்துக்கு மேலான சம்பா பயிர்கள் மழை பாதிப்பில் இருந்து தப்பிவிட்டன.

 குறிப்பாக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளாண்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளை அழைத்து பயிர்களை காப்பது குறித்து அறிவுறுத்தி, அப்பணிகளை தொடர்ந்து கண்காணித்து வந்தார். இதன் விளைவாக வெள்ளநீர் பாதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 70 சதவீதம் குறைந்துள்ளது, என்றார்.

Related Stories:

More