விருத்தாசலத்தில் பரபரப்பு தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் செயின் துணிகர பறிப்பு

விருத்தாசலம், டிச. 2:   விருத்தாசலத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு மாயமாகி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். விருத்தாசலம் அரசு அச்சகம் அருகே உள்ள ஆர்டிஆர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தமணி (87). விருத்தாசலம் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மங்கையர்க்கரசி (80). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆனந்தமணி அவரது மனைவி மங்கையர்க்கரசி ஆகிய இருவரும் வீட்டில் முன்பகுதியில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் மங்கையர்க்கரசியின் கழுத்தில் ஏதோ உறுத்துவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டு, எழுந்து பார்த்தபோது, கழுத்திலிருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு ஓடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து அவர் சத்தம் போட்டதும் அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த மகன்கள் ஓடிவந்து அந்த மர்மநபரை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் மர்ம நபர் மின்னல் வேகத்தில் தப்பிஓடி ஜங்ஷன் சாலை வழியாக தலைமறைவாகி விட்டார். தகவலறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆனந்தமணி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருவதால் அடிக்கடி வீட்டின் கதவை திறந்து வெளியே வருவாராம். அதனால் எப்போதும் காம்பவுண்ட் கேட்டை மட்டும் பூட்டிவிட்டு, வீட்டின் கதவை திறந்தபடியே உறங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் நேற்று முன்தினம் இரவு அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, உள்ளே நுழைந்துள்ளார்.

அப்போது பல்ப் எரிந்து கொண்டிருந்தால் வெளிச்சத்தில் முகம் தெரியாமல் இருப்பதற்காக பல்பின் மீது துணியை போட்டு மறைத்து விட்டு, மங்கையர்க்கரசியின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு சென்றுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் மூதாட்டியின் கழுத்தில் இருந்த செயினை மர்ம நபர்கள் பறித்துச்சென்ற விவகாரம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More