பஸ்சை வழிமறித்து கண்ணாடியை உடைத்து கத்தியை காட்டி மிரட்டி டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்

கடலூர், டிச. 2: ரெட்டிச்சாவடி அருகே கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பஸ்சை வழிமறித்து, டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்றுமுன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் தேசிங்கு என்பவர் ஓட்டினார். கண்டக்டராக நவீன்குமார் என்பவர் இருந்தார். பஸ் ரெட்டிச்சாவடி அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இந்நிலையில் பஸ்சை முந்தி செல்வது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 3 பேரும் பஸ்சை முந்தி சென்று மோட்டார் சைக்கிளை குறுக்கே நிறுத்தி பஸ்சை வழிமறித்தனர்.

மேலும் பஸ்சுக்குள் ஏறி டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஆபாசமாக திட்டி கத்தியால் டிரைவர் தேசிங்கின் கையில் தாக்கி பஸ்சின் கண்ணாடியை உடைத்தனர். இதை தடுக்க வந்த கண்டக்டர் நவீன்குமாரையும் அவர்கள் தள்ளி விட்டனர். மேலும், அவர் பையில் வைத்திருந்த ரூ.1200 பணத்தையும் பறித்தனர். மேலும் 3 பேரும் சேர்ந்து தேசிங்கு மற்றும் நவீன்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பெரிய காட்டுப்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன் (22), பிரித்திவிராஜன் (22), புதுவை மாநிலம் பாகூரை சேர்ந்த மருதநாயகம் (22) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Related Stories: