காட்பாடி- சித்தூர் சாலையில் மழைநீரை வெளியேற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்: ஒன்றியக்குழு தலைவர், தாசில்தார் பேச்சுவார்த்தை

வேலூர், டிச.2: காட்பாடி அருகே மழைநீரை வெளியேற்றக்கோரி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஒன்றியக்குழு தலைவர், தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் முழுவதும் மழை வெள்ளத்தில் சிக்கின. எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல், காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் பகுதியில் உள்ள ஏரி நிரம்பி, கடந்த 4 நாட்களாக கிராமம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் வேலூர்- சித்தூர் சாலையில் 2 இடங்களில் தனித்தனியாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தமிழக- ஆந்திர பிரதான சாலையில் போக்குவரத்து பாதித்தது. இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி தாசில்தார் ஜெகதீஷ்வரன், ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், காட்பாடி போலீசார் மற்றும் பிடிஓக்கள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்று மதியம் 12 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: