நள்ளிரவில் அடுத்தடுத்து நிலநடுக்கத்தால் மக்கள் பீதி: குடியாத்தம் அருகே மீண்டும் பரபரப்பு

குடியாத்தம், டிச.2: குடியாத்தம் அருகே ஏற்கனவே நிலநடுக்கம் வந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை ஊராட்சியில் கடந்த மாதம் 19, 25ம் தேதி இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் பீதியடைந்தனர். இதையடுத்து கடந்த 29ம் தேதி அதிகாலை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காரப்பட்டு காப்புக்காட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் 2 நிமிடங்களில் குடியாத்தத்திலும் இருந்தது. அதன்படி குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை, அக்ரஹாரம், மீனூர்மலை ஆகிய கிராமங்களில் அடுத்தடுத்து 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை வருவாய்த்துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், தட்டப்பாறை அடுத்த மாரியம்மன்பட்டி கிராமத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில விநாடிகள் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீட்டின் பரண் மீது இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தன. கட்டில்கள் சில அடி தூரம் நகர்ந்து சென்றன. வீட்டில் இருந்த மின்விசிறிகள் தாறுமாறாக சுழன்று உள்ளன. கால்நடைகள் அலறி சத்தமிட்டன. அப்போது, தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் பீதியடைந்து, உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

தொடர்ந்து, நள்ளிரவு 12 மணியளவில் மீண்டும் சில விநாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர், நிலைமை சீராகவே தங்களது வீட்டிற்குள் சென்ற பொதுமக்கள் இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்து அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து குடியாத்தம் ஆர்டிஓ தனஜெயன் தலைமையில் தாசில்தார் லலிதா மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் குடியாத்தம் அடுத்த மாரியம்மன்பட்டி கிராமத்தில் உள்ள மக்கள் பயங்கர வெடிசத்தம் கேட்டதாக கூறுகின்றனர். ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டால் வெடிசத்தம் கேட்க வாய்ப்பில்லை. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதற்கான ரிக்டர் அளவு சென்னையில் பதிவாகும்.

அதன்படி சென்னையில் இருந்து தகவல் தெரிவிப்பார்கள். ஆனால் அதுபோல் எதுவும் தகவல் இல்லை. இருந்தாலும் மாரியம்மன்பட்டி கிராமத்தில் புவியியல் துறை, விஐடி பல்கலைக்கழக பேராசிரியர்கள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் அளிக்கும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் மட்டுமே நிலநடுக்கம் ஏற்பட்டதா? என்பது தெரியவரும்’ என்றனர்.

Related Stories: