விளை நிலங்கள், குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது: பயிர்கள் சேதம் மேலும் அதிகரிப்பு

திருவண்ணாமலை, டிச.2: திருவண்ணாமலை மாவட்டத்தில், விடிய விடிய பெய்த கனமழையால், மீண்டும் ஏரிகளில் இருந்து உபரிநீர் பெருக்கெடுத்து சாலைகளிலும், விளைநிலங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதன்காரணமாக, பயிர்கள் சேதம் மேலும் அதிகரிரித்துள்ளது. விவசாயிகள் செய்வதறியாது வேதனையில் உள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரத்தாலும், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையாலும் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை விடிய விடிய கனமழை பெய்தது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக, வந்தவாசியில் 86 மிமீ மழை பதிவானது. மேலும், ஆரணி 7 மிமீ, செய்யாறு 5 மிமீ, செங்கம் 25.80 மிமீ, ஜமுனாமரத்தூர் 8 மிமீ, போளூர் 12.80 மிமீ, திருவண்ணாமலை 52.30 மிமீ, தண்டராம்பட்டு 5.60 மிமீ, கலசபாக்கம் 14 மிமீ, சேத்துப்பட்டு 28 மிமீ, கீழ்பென்னாத்தூர் 20.80, வெம்பாக்கம் 3 மிமீ மழை பதிவானது. அதனால், விளை நிலங்களிலும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ெபாதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 697 ஏரிகளில், 695 ஏரிகள் முழுமையாக நிரம்பியிருக்கிறது. மேலும், 4 ஏரிகள் விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளன.

அதேபோல், ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1,286 ஏரிகளில் 952 ஏரிகள் முழுமையாக நிரம்பியிருக்கிறது. எனவே, முழுமையாக நிரம்பிய ஏரிகளில் இருந்து நேற்று மீண்டும் உபரிநீர் பெருக்கெடுத்து வெளியேறியது.

குறிப்பாக, திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியில் இருந்து பெருக்கெடுத்த உபரிநீர் திருவண்ணாமலை - வேலூர் நெடுஞ்சாலையில் ஆறாக பாய்ந்தது. எனவே, அந்த வழியாக செல்வோர் பெரிதும் அவதிபட்டனர். இந்த ஏரியில் இருந்து உபரிநீர் சேரியந்தல் ஏரிக்கு சென்றதால், அந்த ஏரியிலும் உபரிநீர் திறந்துவிடப்பட்டது. அதனால், ஏரிக்கு அருகேயுள்ள குடியிருப்புகள் மற்றும் பள்ளிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் நாச்சிப்பட்டு பகுதியில் ஏரியில் இருந்து பெருக்கெடுத்த உபரிநீர் சாலைகளிலும், அந்த பகுதிகளில் உள்ள நகரின் விரிவாக்க குடியிருப்பு பகுதிகளிலும் சூழ்ந்தது. எனவே, மழை வெள்ளத்தை வடிகால்வாய்கள் வழியாக விரைந்து வெளியேற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். அதையொட்டி, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கால்வாய்களில் ஏற்பட்டிருந்த அடைப்புகள் அகற்றப்பட்டன. இந்நிலையில், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்த 99 அடியாகவும், கொள்ளளவு 3,609 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,973 கன அடியாக உள்ளதால், மதகுகள் வழியாக தென் பெண்ணை ஆற்றில் 6,973 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அதேபோல், குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 52.48 அடியாகவும், கொள்ளளவு 539 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மிருகண்டா அணையின் நீர்மட்டம் 14.92 அடியாகவும், கொள்ளளவு 46.496 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 182 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், படவேடு செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 49.99 அடியாகவும், கொள்ளளவு 172.311 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து, வினாடிக்கு 768 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் பெரும்பாலும் முழுமையாக நிரம்பியிருப்பதால், கனமழை தொடர்ந்து நீடித்தால் சேதமும், பாதிப்பும் ஏற்படும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே, ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற் பயிர் அறுவடை நிலையில் நீரில் மூழ்கியிருக்கிறது. மழை நீடித்தால், விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: