லாரியில் எம்.சாண்ட் மணலை நிரப்பியதில் டிரைவர் சிக்கி பலி

செய்யாறு, டிச.2: செய்யாறு அருகே கல் குவாரியில் லாரியில் எம்சாண்ட் நிரப்பியபோது லாரியில் ஆள் இருப்பது தெரியாமல் நிரப்பியதால் டிரைவர் மூச்சுத்திணறி பரிதாபமாக பலியானார். புல்டோசர் ஆபரேட்டரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை குன்றத்தூர் அருகே சீக்கராயபுரத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் (31), லாரி டிரைவர். இவர் சென்னையில் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு ஞானசேகரன் தனது மைத்துனரான கிளீனர் விக்னேஷ் (21) என்பவரை லாரியில் ஏற்ற வெம்பாக்கம் தாலுகா சித்தாத்தூர் கிராமத்தில் உள்ள கல்குவாரி ஒன்றுக்கு எம்சாண்ட் லோடு ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் வந்திருந்தார்.

அப்போது, ஞானசேகரன் லாரியின் உள்பகுதியில் எம்சாண்ட் சிந்தாமல் இருக்க ஆங்காங்கே உள்ள சிறுசிறு துளைகளை அடைத்து ெகாண்டுள்ளார். அந்நேரத்தில், கல்குவாரியில் இருந்த புல்டோசர் ஆபரேட்டர் ஆள் இருப்பது தெரியாமல் எம்சாண்டை லாரிக்குள் கொட்டினார். உடனடியாக ஞானசேகரன் சத்தம் போட்டார். சிறிதுநேரத்தில் லாரியில் இருந்து எம்சாண்ட் கீழே கொட்டப்பட்டது. எம்சாண்ட்டில் சிக்கிய ஞானசேகரனை மயங்கிய நிலையில் மீட்டு செய்யாறு அரசு மருத்துமனைக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ஞானசேகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, மைத்துனர் விக்னேஷ் தூசி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து புல்டோசர் ஆபரேட்டர் சுரேஷ்பாபுவை வலைவீசி தேடி வருகின்றனர். ஞானசேகரனுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்து ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: