எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டோரை குற்றவாளிகள் போல் பார்க்க கூடாது

நாகை,டிச.2: எய்ட்ஸ் நோயாளிகளை குற்றவாளிகள் போல் பார்க்க கூடாது என கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார். உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நாகை தனியார் கல்லூரியில் எய்ட்ஸ் நோய் தடுப்பு உறுதிமொழி ஏற்பு விழா நடந்தது. இணை இயக்குநர்(காசநோய்) ராஜா வரவேற்றார். எம்எல்ஏ முகமதுஷாநவாஸ் முன்னிலை வகித்தார். கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை வகித்து எய்ட்ஸ் நோய் தடுப்பு உறுதிமொழியை வாசித்தார். இதை தொடர்ந்து அவர் பேசியதாவது: எய்ட்ஸ் எனப்படும் பால்வினை நோய் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பாதுகாப்பற்ற உடலுறவில் பெண் பிறப்புறுப்பு வாயிலாக பரவுகிறது. இதை தவிர பரிசோதனை செய்யப்படாத ரத்தம் செலுத்துவதன் வாயிலாகவும் பரவுகிறது.

எனவே எய்ட்ஸ் நோய் என்றால் என்ன என்று கூட தெரியதவர்களுக்கு சில காரணங்களால் பரவுகிறது. எனவே எய்ட்ஸ் நோயாளிகளை குற்றவாளிகள் போல் கருதகூடாது. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனைகள் பெற்று தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தால் இந்த நோயில் இருந்து குணமடையலாம். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆலோசனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு சாதாரணமான முறையில் பரவாது.

கருவுற்ற காலத்தில் இருந்து தாய்மார்கள் குழந்தை பெற்ற பின் ஒன்றரை ஆண்டுகள் தாய்சேய் நல பதிவேட்டில் அனைத்து தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும். ஏ.ஆர்.டி எனப்படும் கூட்டு மருந்து சிகிச்சை மூலம் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்ஐவி கிருமி இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி உடலில் நோய் எதிரப்பு சக்தியை அதிகரித்து கொள்ளலாம் என்றார். திட்ட இயக்குநர் சக்திவேல் நன்றி கூறினார்.

Related Stories: