காரைக்கால் வாரச்சந்தை தற்காலிக இடமாற்றம்

காரைக்கால், டிச.2: காரைக்காலில் நகராட்சித் திடலில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் அதிகளவில் வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால் சிறிய மழை பெய்தாலே வாரச் சந்தை நடைபெறும் இடம் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக உள்ளூர் விவசாயிகள், வெளியூர் வியாபாரிகள் பாதிக்கப்படுவதோடு காய்கறி வாங்க வரும் காரைக்கால் மக்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து நேற்று (1ம்தேதி) தினகரனில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இத்தகவல் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டது. உடனே அரசு உயர் அதிகாரிகளுடன் வாரச் சந்தை நடைபெறும் இடத்தை பார்வையிட்ட காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜுன் சர்மா தற்காலிகமாக வியாபாரிகள் அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரச் சந்தையை நடத்திக் கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ள உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் 43 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க வாரச் சந்தையை அதேயிடத்தில் தொடர்ந்து நடத்திட மாவட்ட கலெக்டர் வழிசெய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

மழைக்காலம் முடிவுற்றவுடன் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை அல்லது வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வாங்கிவரும் பொருட்களை சந்தைபடுத்த சந்தை திடலில் கான்கிரீட் தளம் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: