நாகனூரில் கழிவு நீரை அகற்றக்கோரி வார்டு உறுப்பினர்கள், மக்கள் உண்ணாவிரதம்

தோகைமலை, டிச. 2: கரூர் மாவட்டம் நாகனூரில் உள்ள பகவதியம்மன், காளியம்மன் கோவில் மற்றும் குடியிருப்புகளில் சாக்கடை கழிவு நீர் சூழ்ந்து உள்ளதை அகற்றக்கோரி வார்டு உறுப்பினர்கள் மல்லிகா மற்றும் முருகாயி உள்ளிட்ட பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் லதாராஜா ஆகியோர் உண்ணாவிரதம் இருந்த வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வார்டு உறுப்பினர்கள் கூறுகையில்: கம்பத்தாம்பாறை ரோட்டில் இருந்து தோகைமலை பாளையம் மெயின் ரோட்டில் மேற்கு நோக்கி சாக்கடை கழிவு நீர் வருகிறது. இந்த கழிவுநீரானது முறையாக வெளியேறாமல் நாகனூர் பகவதியம்மன், காளியம்மன் கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து நிற்கிறது.

இதனால் கம்பத்தாம்பாறை ரோட்டில் இருந்து வரும் கழிவு நீரை தோகைமலை மெயின் ரோட்டின் கிழக்கு நோக்கி வடிகால் அமைத்து சாக்கடை கழிவுநீரை முறையாக வெளியேற்ற வேண்டும். இதுகுறித்து ஊராட்சி மற்றும் தோகைமலை ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தனர். பின்னர் ஒன்றிய பொறியாளர் மூலம் ஆய்வு செய்து வடிகால் அமைத்து சாக்கடை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: