டாஸ்மாக் சூபர்வைசரிடம் ₹6 லட்சம் பறிப்பு கோவை சிறையில் இருந்த 3 பேர் கைது

ஆத்தூர், டிச.2: ஏத்தாப்பூர் டாஸ்மாக் கடை சூபர்வைசரை தாக்கி ₹6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், கோவை சிறையில் இருந்த 3பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் பேரூராட்சியில் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளராக பணியாற்றுபவர் மோகன்(48). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி இரவு, கடையை பூட்டி விட்டு, அன்று மது விற்பனையான பணம் ₹6லட்சத்தை எடுத்து கொண்டு, டூவீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஏத்தாப்பூர் வசிஷ்ட நதி பாலத்தின் அருகே வந்த போது, எதிரே வந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி விட்டு, டூவீலரில் வைத்திருந்த ₹6 லட்சத்தை பறித்துச் சென்றனர். இது குறித்து, மோகன் கொடுத்த புகாரின் பேரில், ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில், தற்போது கோவை சிறையில் உள்ள குற்றவாளிகளான திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த மகாதேவன் குளம் பகுதியை சேர்ந்த இசக்கி பாண்டியன் மகன் செந்தில்குமார்(எ) கார்த்திக்(29), அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை(27), ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த முரளி மகன் குமரேசன்(எ) குமார்(30) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்த போலீசார், அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் மோகனிடம் ₹6 லட்சத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து அவர்கள் 3 பேரையும், ஏத்தாப்பூர் போலீசார் கைது செய்து, ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related Stories: