சேலம் மாநகராட்சி 9, 10வது வார்டுகளில் மக்கள் குறைகேட்பு திமுக எம்எல்ஏ, மாநகராட்சி கமிஷனர் பங்கேற்பு

சேலம், டிச.2: சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 9, 10வது வார்டு  பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகேட்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ்  ஆகியோர் கலந்து ெகாண்டு, முத்துக்கவுண்டன் தெரு, ஏரி கொடி தெரு, பாரதியார் நகர்,  வள்ளுவர்காலனி, தாதாம்பட்டி பிரிவு நேரு நகர், அல்லிக்குட்டை,  எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். அப்போது, அங்குள்ள சக்தி நகர், 4வது குறுக்குத் தெரு, தாண்டவன் தெரு குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து விடுவதை தடுக்க, சாக்கடை கால்வாய் அமைத்து தரப்படும் என உறுதியளித்தனர். மேலும், அண்ணா நகர் 4வது தெருவில் சாக்கடை கால்வாயும், பெருமாள் கோவில் தெருவில் ₹25 லட்சம் மதிப்பில் 300 மீட்டர் நீள கான்கிரீட் சாலை அமைத்து, வடிகால் வசதியும், வடக்கு வன்னியர் தெருவில் 15 லட்சத்தில் கான்கிரீட் சாலை மற்றும் வடிகால் வசதி அமைத்து தரப்படும், வீராணம் பிரதான சாலை மன்னார்பாளையம் பிரிவில் ₹60 லட்சம் மதிப்பில் சாலைகள் அமைத்து வடிகால் வசதி ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்தனர். அப்போது, உதவி கமிஷனர் சித்ரா, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், சுகாதார அலுவலர் பாலு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: