பள்ளிபாளையத்தில் குக்கரில் சாராயம் காய்ச்சிய பிளம்பர் கைது

பள்ளிபாளையம், டிச.2: பள்ளிபாளையத்தில், குக்கரில் சாராயம் காய்ச்சிய பிளம்பரை கைது செய்த போலீசார், ஒரு லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம், இடைப்பாடி அடுத்த ஆலச்சம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னதம்பி(52). பிளம்பரான இவர், கடந்த சில மாதங்களாக பள்ளிபாளையம் அடுத்த கோரக்காட்டு பள்ளம் குப்பையண்ண சுவாமி கோயில் அருகே, அறை ஒன்றை வாடகைக்கு பிடித்து, வேலைக்கு சென்று வந்தார். இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று சம்பவ இடத்திற்கு வந்த போலீசாார், சின்னதம்பியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரது அறையில் இருந்து கள்ளச்சாராய ஊறல் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து போலீசார் அறையில் சோதனையிட்ட போது, அங்கு பிளாஸ்டிக் பேரலில் 20 லிட்டர் ஊறல் மற்றும் ஒரு கேனில் ஒரு லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அறைக்குள் ஊறல் போட்டு தினமும் 2 லிட்டர் அளவிற்கு ஊறல் எடுத்து, சமையல் செய்யும் குக்கரில் கொதிக்க வைத்து, விசில் பகுதியில் ரப்பர் டியூப் மூலம் நீராவியை சேகரித்து குளிர வைத்து சாராயம் தயாரித்தது தெரியவந்தது. மேலும், தான் குடித்தது போக, தனது நண்பர்கள் சிலருக்கும், அவர் தனது சொந்த தயாரிப்பு என பெருமையாக சாராயத்தை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சின்னதம்பியை கைது செய்த போலீசார், ஒரு லிட்டர் சாராயம், ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.

Related Stories:

More