எச்ஐவி பாதித்தவர்களை புறக்கணிக்க கூடாது

கிருஷ்ணகிரி, டிச.2: எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மக்களை புறக்கணிக்க கூடாது என எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியில் கலெக்டர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்தார். பின்னர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து, உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி நடைபெற்ற கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை, பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கி கலெக்டர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாளை நீட்டிக்க, கூட்டு மருந்து சிகிச்சை மூலம் சிறப்பான மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மக்களிடம், எந்த வித ஒதுக்குதலும், புறக்கணித்தலும் செய்தல் கூடாது. அவர்களுக்கு அனைத்து உதவிகளும், காலம் தாழ்த்தாமல் அளிக்கப்படும். அனைவரும் எச்ஐவி தடுப்பு பணியில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மருத்துவர்களும், நோயாளிகளும் இணைந்து செயல்பட்டால், எச்ஐவி நோய் தாக்கத்தை தடுக்கலாம்.

எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்டவர்கள் சரியான நேரத்தில் மாத்திரைகளையும், சத்தான உணவுகளை உட்கொண்டு இயல்பான வாழ்க்கை வாழ வேண்டும். எய்ட்ஸ் இல்லாத நிலையை ஏற்படுத்த, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் பரமசிவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கோவிந்தன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள், தாசில்தார் சரவணன், கூட்டு மருந்து சிகிச்சை மைய மருத்துவர்கள் ஜெகன், சவுமியா, இளங்கோ மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், எச்ஐவி உள்ளோர் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More